Monday, 24 April 2017

ரசிகர்கள் தேவையில்லை!

ஒரு ஹைக்கூவும் ஒரு கோப்பை தேநீரும் என்ற முகநூல் பக்கத்தில் 2-12/04/2017 தேதிகளில் நடைபெற்ற நெய்தல் நிலம் பற்றிய ஹைக்கூ போட்டியில் நான் எழுதி பதிவிட்ட கவிதைகள்

மீனவர் சுட்டுக்கொலை
பறக்கிறது
புதியகடிதம்

கட்டப்படுகிறது
புதிய துறைமுகம்
மீனவர்களின் கை

சூரிய உதயம்
கடற்கரையில் காத்திருப்பு
அப்பாவுக்காக

வலையில் சிக்கல்
விழுவதேயில்லை
முதலாளியின் காதில்

மீன் சந்தை
கிடைக்கவேயில்லை
நல்ல விலை

எல்லை தெரியாமல்
கடந்திருந்தது
அரக்கர்களின் குணம்

நான் எழுதி பதிவிடாத கவிதைகள்

நீரிலேயே கிடக்கிறான்
நீங்கவேயில்லை
பாவக்கறை

மீனவர் மரணம்
பிழைத்திருந்தது
அரசியல்

வழக்கம் போல் என்னுடைய ஒரு கவிதையை கூட சீண்டவில்லை அவர்கள், ஏன் இப்படி கூறுகின்றேன் என்றால் முடிவானது ஒரு மின்னிதழில் வந்திருந்தது, அதில் பரிசு பெற்ற கவிதைகள் போக மீதமுள்ள கவிதைகளில் சிறந்தவை என்ற தலைப்பில் ஒரு முப்பது கவிதைகள் போட்டிருந்தனர், அதில் அடியேனுக்கு கடைசியில் கூட இடமில்லை, கொஞ்சம், இல்லவே இல்லை, மோசமான வருத்ததில் இருக்கிறேன், ஆனால் எனக்கு இது பழக்கமான ஒன்றுதான் ஏனென்றால் இதுவரை ஒரு அங்கிகாரம் கூட கிடைத்ததில்லை எனக்கு, அது என்னவோ ஒருவர் கூட என்னை சீண்டியதில்லை என்னை, ஏன் என்றும் தெரியவில்லை, ஒரு உதாரணம் சொல்லுகிறேன் கேளுங்கள், என்னுடைய பன்னிரெண்டாம் வகுப்பின் போதே நான் கொஞ்சம் கவிதைகளை எழுதுவேன், என் அருகில் அமர்ந்திருக்கும் நண்பன் ஒருவன் அடிக்கடி அவனது காதலிக்கு எழுதி வாஙகிச் செல்வான், ஒரு கட்டத்தில் அவனுக்கு கவிதை எழுத கற்று கொடுத்தேன் பிறகு அவன் நன்றாகவே கவிதை எழுதினான், எனக்கொன்றும் வருத்தமில்லை அதில், ஆனால் அது தமிழ் இரண்டாம் தாள் திருத்தி கொடுக்கும் நாளன்று மட்டும் கிடையாது, ஏனென்றாள் அந்த தாளில் கவிதைக்கு ஒரு ஐந்து மதிப்பெண்கள் உண்டு, அதில் அவன் எப்போதுமே முழுமதிப்பெண் பெற்றுவிடுவான், அடியேன் நானோ என் அடித்துவைக்கப்பட்ட கவிதையை பார்த்து ஒரு மதிப்பெண் கூடவா மதிப்பில்லாதது நம் கவிதை என நொந்து போயிருக்கிறேன் தெரியுமா, அவன் கவிதையை வாங்கிபார்த்தால் ஒரு பதினாறு மதிப்பெண் விடைபோல காட்சியளிக்கும், ஒரு வேளை இப்படித்தான் எழுத வேண்டுமோ என நினைத்து கொள்வேன், ஆனாள் அடுத்தமுறையும் அந்த அம்மா அடித்து வைக்க, கண்ணீர் விடாத குறைதான் அதுவெல்லாம், இப்படி பாராட்டு கிடைத்ததேயில்லை என் கவிதைகளுக்கு, அதனாலே பழகி போய்விட்டது இந்த ஏமாற்றங்கள், ஆனால் என் கவிதைகளை இப்படி கேட்பாரற்று விட்டுவிட மனம்வரவில்லை எனக்கு, நன்றாக இருக்கிறதோ இல்லையோ அதை நானே வைத்துக்கொள்கிறேன் என துவங்கியதே இந்த வலைப்பக்கம்,
இங்கு நான் என்னுடைய, எனக்குமட்டுமே பிடித்த கவிதைகளை பதிவேற்றி வைத்திருக்கிறேன், இவைகள் சாபம் பெற்ற கவிதைகள் அல்ல நான் வரமாய் பெற்ற என்னுடைய கவிதைகள், இது உங்களுக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ, நான் மனதார காதலிக்கிறேன் இவைகளை, என்னுடைய காதல் பெருகிக்கொண்டே போகும்!