Thursday, 9 November 2017

தேநீர்

அவள் கொடுத்த தேநீரில்,
அப்படி எதுவுமே இல்லை,
அருமை! என கூறவைக்கும்,
அந்த ரசாயனம் தவிர்த்து!!

நினைவுகள்

என் இதயம் நிரப்பி,
வழியும் உன் நினைவுகள்,
பிடித்து சேகரி்க்கிறேன்
கவிதைகளென!!

சவபெட்டி

அவளுக்காய் ஓர்,
அற்புதமான கவிதை,
எழுதி,
படித்து,
மடித்து,
சேமித்து வைக்கிறேன்,
அதற்கான சவபெட்டியில்

அனிச்சைசெயல்

அனிச்சைசெயல்களில்,
அவளது கொலுசோசையையும்
சேர்த்து விடுகிறது,
இந்த காதல்..!
எனையறியாது
திரும்பியபடி நான்!!

Saturday, 16 September 2017

மழையின் காமம்

துளித்துளியாய்
மழை
விழுவதெல்லாம்,
மெதுமெதுவாய்
உன்மேல்
பயணிக்கத்தான்!

அவளுக்காக!

தோட்டக் காவலர்களுக்கு
தெரியாமல்,
சுற்றிலும் நோட்டமிட்டு,
ரோசாவை,
வெடுக்கென பறிப்பதைகாட்டிலும்,
ரசிப்பது கடிணமாய்!!
இங்கே!!

அப்பாவுடன் அவள்!

ஈர்ப்பு விசை

என் ஈர்ப்பு விசையிலிருந்து,
மெது மெதுவாய் நழுவி,
வெளியேறிய என் நிலவு,
வேறு கிரகமோ!
வெறும் கல்லோ!!.

நெற்றிபொட்டு

நெல்மணி போன்ற,
உன் சிறிய நெற்றிப்பொட்டால்,
எத்தனை முறைதான்
விதைப்பாய்,
என்னுள் காதலை!!.

நினைவுகள்

என்,
நினைவு அலைகளால்,
அழிக்க முடியாத காலடித்தடம்,
நீ!!.

நகரத்து மழை

பகல் வேண்டாம்,
இரவோடு வா மழையே!,
அப்போதேனும்,
வசை நிறுத்தட்டும்,
மழை பிடிக்காத,
இந்த நகரத்து மக்கள்.

Wednesday, 26 July 2017

தாகம்!

மழை நனைத்த உனக்காய்
ஒர் கவிதை,
எழுதி,
மறைக்க முடியாமல்,
நானும்,
நனைந்த உன்னைபோலவே!

தாகம்!

மழை நனைந்த நீ
மனம் தொலைத்த நான்,
மறைக்க முடியாமல்,
நீயும் நானும்

மழை!

அடடா மழையென்று,
அதிர்ச்சியில் கூட
கை நீட்டிவிடாதே,
கொஞ்சம் பொறு,
எங்கள் ஊரிலும்
ஏதோ பெய்துவிட்டு வரட்டும்!.
இந்த மழை!!

மழை!

மழை,
நனைவதாயிருந்தால்,
முன்னதாய் சொல்லிவிடு,
நிலவில் மழை!
ஆராய வேண்டும் நான்!

காதல்

காதல்
குழந்தைகளின் விளையாட்டு பொருள்,
ஒளித்து வைக்கலாம்,
இருந்தும்
வெளிவந்துவிடும்!!

ஏக்கம்

உன் காதோரத்தில்
ஓர் வியர்வை துளி
மெல்ல மெல்ல வழிந்து
உன் கழுத்தை
கடநதபோது
காணமல் போயிற்று
என் பெருமூச்சுக்காற்றில்

சொர்க்கம்

கோப்பை தேநீர்
கொஞ்சம் மழை
ஒதுங்கி நிற்க மரம்
உரசி நிற்க நீ
எதற்கு வேண்டும்
இனியும் சொர்க்கம்!

Monday, 24 April 2017

ரசிகர்கள் தேவையில்லை!

ஒரு ஹைக்கூவும் ஒரு கோப்பை தேநீரும் என்ற முகநூல் பக்கத்தில் 2-12/04/2017 தேதிகளில் நடைபெற்ற நெய்தல் நிலம் பற்றிய ஹைக்கூ போட்டியில் நான் எழுதி பதிவிட்ட கவிதைகள்

மீனவர் சுட்டுக்கொலை
பறக்கிறது
புதியகடிதம்

கட்டப்படுகிறது
புதிய துறைமுகம்
மீனவர்களின் கை

சூரிய உதயம்
கடற்கரையில் காத்திருப்பு
அப்பாவுக்காக

வலையில் சிக்கல்
விழுவதேயில்லை
முதலாளியின் காதில்

மீன் சந்தை
கிடைக்கவேயில்லை
நல்ல விலை

எல்லை தெரியாமல்
கடந்திருந்தது
அரக்கர்களின் குணம்

நான் எழுதி பதிவிடாத கவிதைகள்

நீரிலேயே கிடக்கிறான்
நீங்கவேயில்லை
பாவக்கறை

மீனவர் மரணம்
பிழைத்திருந்தது
அரசியல்

வழக்கம் போல் என்னுடைய ஒரு கவிதையை கூட சீண்டவில்லை அவர்கள், ஏன் இப்படி கூறுகின்றேன் என்றால் முடிவானது ஒரு மின்னிதழில் வந்திருந்தது, அதில் பரிசு பெற்ற கவிதைகள் போக மீதமுள்ள கவிதைகளில் சிறந்தவை என்ற தலைப்பில் ஒரு முப்பது கவிதைகள் போட்டிருந்தனர், அதில் அடியேனுக்கு கடைசியில் கூட இடமில்லை, கொஞ்சம், இல்லவே இல்லை, மோசமான வருத்ததில் இருக்கிறேன், ஆனால் எனக்கு இது பழக்கமான ஒன்றுதான் ஏனென்றால் இதுவரை ஒரு அங்கிகாரம் கூட கிடைத்ததில்லை எனக்கு, அது என்னவோ ஒருவர் கூட என்னை சீண்டியதில்லை என்னை, ஏன் என்றும் தெரியவில்லை, ஒரு உதாரணம் சொல்லுகிறேன் கேளுங்கள், என்னுடைய பன்னிரெண்டாம் வகுப்பின் போதே நான் கொஞ்சம் கவிதைகளை எழுதுவேன், என் அருகில் அமர்ந்திருக்கும் நண்பன் ஒருவன் அடிக்கடி அவனது காதலிக்கு எழுதி வாஙகிச் செல்வான், ஒரு கட்டத்தில் அவனுக்கு கவிதை எழுத கற்று கொடுத்தேன் பிறகு அவன் நன்றாகவே கவிதை எழுதினான், எனக்கொன்றும் வருத்தமில்லை அதில், ஆனால் அது தமிழ் இரண்டாம் தாள் திருத்தி கொடுக்கும் நாளன்று மட்டும் கிடையாது, ஏனென்றாள் அந்த தாளில் கவிதைக்கு ஒரு ஐந்து மதிப்பெண்கள் உண்டு, அதில் அவன் எப்போதுமே முழுமதிப்பெண் பெற்றுவிடுவான், அடியேன் நானோ என் அடித்துவைக்கப்பட்ட கவிதையை பார்த்து ஒரு மதிப்பெண் கூடவா மதிப்பில்லாதது நம் கவிதை என நொந்து போயிருக்கிறேன் தெரியுமா, அவன் கவிதையை வாங்கிபார்த்தால் ஒரு பதினாறு மதிப்பெண் விடைபோல காட்சியளிக்கும், ஒரு வேளை இப்படித்தான் எழுத வேண்டுமோ என நினைத்து கொள்வேன், ஆனாள் அடுத்தமுறையும் அந்த அம்மா அடித்து வைக்க, கண்ணீர் விடாத குறைதான் அதுவெல்லாம், இப்படி பாராட்டு கிடைத்ததேயில்லை என் கவிதைகளுக்கு, அதனாலே பழகி போய்விட்டது இந்த ஏமாற்றங்கள், ஆனால் என் கவிதைகளை இப்படி கேட்பாரற்று விட்டுவிட மனம்வரவில்லை எனக்கு, நன்றாக இருக்கிறதோ இல்லையோ அதை நானே வைத்துக்கொள்கிறேன் என துவங்கியதே இந்த வலைப்பக்கம்,
இங்கு நான் என்னுடைய, எனக்குமட்டுமே பிடித்த கவிதைகளை பதிவேற்றி வைத்திருக்கிறேன், இவைகள் சாபம் பெற்ற கவிதைகள் அல்ல நான் வரமாய் பெற்ற என்னுடைய கவிதைகள், இது உங்களுக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ, நான் மனதார காதலிக்கிறேன் இவைகளை, என்னுடைய காதல் பெருகிக்கொண்டே போகும்!

Tuesday, 14 March 2017

கவிதை அணை

மெது மெதுவாய்
நிறைந்துவரும்
என் கவிதைகளின் அணை,
என்றேனும் ஓர் நாள்
உடையக்கூடும்,
அது நள்ளிரவாகவோ,
நன்பகலாகவோ இருக்கலாம்,
காதல் வைத்திருப்போர்
அதில் ஏறி
காணாமல் போய்விடுங்கள்,
காதல் இல்லாதோர்,
கண்களை மூடி குதியுங்கள்,
என் கவிதை,
கரை சேர்க்குமோ
கடல் சேர்க்குமோ
தெரியாது,
நிசமாய் காதல் சேர்க்கும்.

Sunday, 12 March 2017

குலசேகரம்

குலசேகரம்

“டேய், என்னடா மொறைக்குர, அடிச்சு பல்லுகில்லு எல்லா உடைக்க போறன் பாரு” கேட்டதும் திகைத்து போய் நின்றான் பாண்டி.

நாகர்கோவிலுக்கு மேற்கே திருவனந்த்புரம் போற பாதையிலதான் இருக்கு இந்த குலசேகரம், ஏதோ ஏரிய பேருந்து நிலையமா மாத்துனது மாதிரி குழிக்குள்ளதான் இருக்கு அந்த ஊரோட பெருந்து நிலையம், பெரிய ஊருங்கிறதால எப்பவுமே கொஞ்சம் கூட்டமாவும் நிறைய சத்தமாவும் இருக்கும், கீழ இருந்து மெதுவா ஏறி, பெருந்து நிலையத்தோட வாசல்ல வந்து பேருந்திற்காய் காத்து கொண்டிருந்தான் பாண்டி, பெருந்து எப்ப வரும் என்று அருகில் இருப்பவரிடம் கேட்க, அவரோ மலையாலத்தில் கொஞ்சுண்டு தமிழ் சேர்த்து ஏதோ சொன்னார், ஆனால் புரியும்படிதான் இருந்த்து, அப்பொழுது, தூரத்தில் ஒரு மாற்றுதிறனாளி தனது இரு செயற்கை கால்களை கைகளால் ஊன்றி ஏதொ உளரியபடி நடந்து வந்தார், சிறிது தூரம் வந்தவர் எல்லோரிடமும் காசு கேட்டு வாங்கிகொண்டிருந்தார், பாண்டி அவன் பையில் கைவிட்டு சில்லரைகளை எடுத்து அவரை பார்த்தபடி நின்றிருந்தான், அவனருகில் வந்ததும் அவர், முகத்தில் இருந்த சிரிப்பை கிழித்து எறிந்துவிட்டு கோபத்தை ஒட்டிக்கொண்டவராய், டேய் என்னடா மொறைக்குர அடிச்சு பல்லுகில்லு எல்லா உடைக்க போறன் பாரு என்று அவனை நோக்கி கத்தினார், ஒரு நிமிடம் மிரண்டு போய் அவரையே பார்த்தான் பாண்டி, மெதுவாய் அவர் கோப முகத்தை மாற்றி நக்கலாய் சிரிக்க ஆரம்பித்தார், சத்தமாய் சிரித்துவிட்டு பயந்துட்டியா என சிரித்தபடி அங்கிருந்து மெதுவாய் நகர்ந்தார்.

Tuesday, 14 February 2017

தலையாட்டிகள்

நீ பேசும் போதெல்லாம்
தலையாட்டி பொம்மையாகின்றோம்
நானும் உன் கம்மலும்!

நடுக்கம்

அடுத்த முறையேனும்,
நிறுத்திவிட வேண்டும்,
அவள் பார்த்ததும்
எச்சில் விழுங்குவதை!

பிரசவம்

உன் நினைவின் வலிகள்!
மெது மெதுவாய் பிரசவித்திருந்தது!
மூன்று நான்கு கவிதைகள்.

கெஞ்சல்

கெஞ்சித்தான் கேட்கிறேன்!
கொஞ்சம் காதல் தந்து
பஞ்சம் தீர்த்துவை!
என் கவிதைகளின்!

நிறவெறி

கவிஞர்களின் நிறவெறி
கேட்பாரற்று கிடக்கும்
'அமாவாசை நிலவு'